சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். "உதயநிதி கோமாளித்தனத்தை விட வேண்டும். அவருக்கு GenZ என்றால் என்னவென்று கூட தெரியவில்லை" என்று அவர் கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் போராட்டத்தை சுட்டிக்காட்டிய நிர்மல்குமார், "நீட் தேர்வு போராட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் 200 ரூபாய் கொடுத்து GenZ திமுகவினரை உட்கார வைத்திருக்கிறார்கள். திமுகவை வழிநடத்த உதயநிதிக்கும், கனிமொழிக்கும் வாக்கெடுப்பு நடத்தி அவரது தகுதியை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும். திமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி உதயநிதிக்கு இருக்கிறதா? திமுகவில் கனிமொழியா? உதயநிதியா? என வாக்கெடுப்பு நடத்த தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "உதயநிதி ஸ்டாலின் இனியாவது தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். GenZ திமுக என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் திமுகவினர் புகுந்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் நம்பிக்கை தெரிவித்தார். கர்நாடகா பயணம் குறித்து முதலமைச்சர் அலுவலகம் அறிவிக்கும் என்றும், இரு மாநில பிரச்சனைகளை நேரில் பேசி தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.
