2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, தமக்கு கை கொடுக்காமல் விராட் கோலி தவிர்த்துச் சென்ற சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து 'கோட் ஸ்போர்ட்ஸ்' ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 'இதில் சமாதானமாகப் போவதற்கு எதுவுமில்லை. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. போட்டி நடைபெறும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை' என்று மிகவும் நிதானமாகப் பதிலளித்துள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், விராட் கோலி பேட்டிங் செய்தபோது டிராவிஸ் ஹெட்டுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். போட்டி முடிந்த பிறகு, இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்ளும் நிகழ்வின் போது, விராட் கோலி டிராவிஸ் ஹெட்டை முற்றிலும் புறக்கணித்து, அவருக்குக் கை கொடுக்காமல் கடந்து சென்றார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விராட் கோலியின் ரசிகர்கள் டிராவிஸ் ஹெட்டின் குடும்பத்தினர் வரை கடுமையாக விமர்சித்தனர். இதனால், டிராவிஸ் ஹெட் – விராட் கோலி இடையே பகை இருப்பது போன்ற ஒரு பிம்பம் உருவானது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெசிகா டேவிஸ் சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். மோசமான வார்த்தைகளாலும், மிரட்டல்களாலும் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் கோலி ரசிகர்கள் எல்லை மீறினர்.
இது குறித்துப் பேசிய டிராவிஸ் ஹெட், 'விளையாட்டு உலகில் இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்வது இயல்புதான். எனது மனைவி ஜெசிகா இதனை மிக முதிர்ச்சியுடன் கையாண்டார். ஆனால், பொதுவெளியின் வெளிச்சத்திற்குப் பழக்கப்படாத எங்கள் குடும்பத்தினருக்கு இந்தச் சம்பவம் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியது. சில நாட்களில் மக்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள்' என்று கூறினார்.
விராட் கோலியின் இந்தச் செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டிராவிஸ் ஹெட்டின் இந்த விளக்கம் தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளின் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு என்றாலும், வீரர்களிடையே பரஸ்பர மரியாதை பேணப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெசிகா டேவிஸ் மீதான ரசிகர்களின் தாக்குதல் கண்டனத்திற்குரியது என்றும், இது விளையாட்டு வீரர்களின் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு என்பது வீரர்களுக்கு இடையேயான போட்டியே தவிர, குடும்பத்தினரைத் தாக்குவதல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விராட் கோலி தரப்பிலிருந்து இது குறித்து எந்தவிதமான விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் மேலும் எந்த அளவுக்குச் செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
