திருப்பூரில், பழுது பார்க்க விடப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டர் 100 நாட்களைக் கடந்தும் திருப்பி வழங்கப்படாததால், பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஓலா நிறுவனம் முன் கேக் வெட்டி நூதன முறையில் போராட்டம் நடத்திய சம்பவம் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சந்தோஷ் என்ற இளைஞர், கடந்த மே மாதம் தனது ஓலா மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட சிறிய மோட்டார் பிரச்சனை காரணமாக அதை சர்வீஸுக்காக ஓலா நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார். ஆனால், நான்கு மாதங்கள் கடந்தும் ஸ்கூட்டர் திருப்பி வழங்கப்படாததால், அதிர்ச்சியடைந்த அவர், நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ஷோரூம் வாசலில் கேக் வெட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் சந்தோஷ் கூறுகையில், 'எனது ஸ்கூட்டரை எடுத்து சுமார் இரண்டு வருடங்களாகிறது. ஒரு சிறிய மோட்டார் பிரச்சனைக்காக மே மாதம் சர்வீஸ்க்கு கொடுத்தேன். அதன் பிறகு ஸ்கூட்டரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. நேரில் சென்றால் சரியான பதில் கிடைப்பதில்லை. திருப்பூரில் மட்டும் சுமார் 150 ஸ்கூட்டர்கள் இதுபோல் பழுது நீக்கப்பட்டு ஷோரூமிலேயே நிற்பதாகக் கூறுகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்சார வாகனங்களுக்கு மாறச் சொல்கிறார். ஆனால், இந்த சர்வீஸ் பிரச்சனைகளை யார் கவனிப்பார்கள்? ஓலாவில் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக பலர் கூறுவதாகவும், ஆனாலும் ஓலா நிறுவனம் தொடர்ந்து ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
'அரசாங்கம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களை எதிர்த்துப் போராட என்னால் முடியவில்லை. அதனால், ஓலா மின்சார ஸ்கூட்டரை பழுது பார்க்க விட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் திருப்பித் தராததால், கடை வாசலில் கேக் வெட்டி கொண்டாடுகிறேன். அடுத்த முறை கிடா வெட்டப் போகிறேன். என் வண்டி திருட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பேன். இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. மக்கள் ஓலா வண்டி வாங்குவதற்கு முன் சர்வீஸ் வசதி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். நான் வரி கட்டித்தான் வண்டியை வாங்கினேன். அப்படியிருக்கையில் எங்கள் நிலை என்ன? போக்குவரத்துத்துறை அமைச்சர் இதற்கு பதில் சொல்வாரா? ஆர்.டி.ஓ-வில் சென்று கேள்வி கேட்க முடியுமா?' என்று அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
இந்த நூதனப் போராட்டம், ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் பழுது நீக்கும் நடைமுறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் இக்காலகட்டத்தில், இதுபோன்ற சர்வீஸ் பிரச்சனைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷின் இந்த செயல், சமூக வலைத்தளங்களில் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஓலா நிறுவனம் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார வாகனங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு, இதுபோன்ற சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உரிய தீர்வு காண்பதும் நிறுவனங்களின் பொறுப்பாகும்.
இந்த சம்பவம், மின்சார ஸ்கூட்டர் வாங்குவோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சர்வீஸ் மற்றும் பழுது நீக்கும் வசதிகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
