ஃபின்லாந்தில் இளைஞர்கள் தங்கள் துணையைத் தேட ஒரு புதிய மற்றும் சுவாரஸ்யமான வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி டேட்டிங் ஆப்களில் நேரத்தை வீணடிக்காமல், ஒரு பிங்க் நிற ஷாப்பிங் கூடையின் உதவியுடன் துணையை கண்டறியலாம் என அந்நாட்டு சூப்பர் மார்க்கெட்டுகள் அறிவித்துள்ளன.
ஆன்லைன் டேட்டிங் ஆப்களில் பயனர்கள் ஒருவரையொருவர் ஸ்வைப் செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஃபின்லாந்தின் சில முன்னணி சூப்பர் மார்க்கெட்டுகள் ஒரு புதுமையான திட்டத்தை முன்னெடுத்துள்ளன. கடைகளுக்குள் நுழையும்போது, தாங்கள் இன்னும் தனிமையில் இருப்பதாகவும், புதிய உறவுகளை உருவாக்கத் தயாராக இருப்பதாகவும் உணரும் வாடிக்கையாளர்கள், பிரத்யேகமாக வைக்கப்பட்டிருக்கும் பிங்க் நிற ஷாப்பிங் கூடைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பிரகாசமான பிங்க் நிறக் கூடை, மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு பச்சை சிக்னலாக செயல்படும். அதாவது, நீங்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை இது உணர்த்தும். எந்தவிதமான மொக்கையான பிக்கப் லைன்களோ அல்லது டேட்டிங் ஆப் சுயவிவரங்களோ இல்லாமல், நேரடியாக ஒருவரையொருவர் சந்தித்துப் பேச இது ஒரு எளிய வாய்ப்பை வழங்குகிறது.
சமூக வலைத்தளப் பயனர் ரோயா ஃபாக்ஸ் என்பவர், ஃபின்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் இந்த பிங்க் கூடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் இப்போது ஃபின்லாந்தில் ஒரு மளிகைக் கடையில் இருக்கிறேன். என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு விஷயத்தைப் பார்த்ததில்லை. நீங்கள் காதலைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், பார், கிளப் என்று அலைந்து திரியத் தேவையில்லை. இந்த பிங்க் கூடையை எடுத்துக்கொண்டு கடைக்குள் நடந்தாலே போதும், உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ இங்கேயே கண்டுபிடித்துவிடலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த 'மளிகைக் கடை காதல்' முறை இணையத்தில் வைரலாகி வருகிறது. டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தி சோர்வடைந்த ஐரோப்பிய இளைஞர்களுக்கு இந்த புதிய சந்திப்பு முறை மிகவும் பிடித்துப் போயுள்ளது. ஃபின்லாந்து மட்டுமின்றி, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் உள்ள மளிகைக் கடைகள் இப்போது காதல் ஜோடிகள் இணையும் மையங்களாக மாறி வருகின்றன.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது ஐரோப்பாவில் ட்ரெண்டாகும் ஒரு புதுப் பழக்கமாக மாறி வருகிறது. இந்த புதுமையான முயற்சி, தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும், புதிய உறவுகளைத் தேடும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்த திட்டம், நேரடியான மற்றும் எளிமையான முறையில் மக்களை இணைக்கும் ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. இனி காதல் தேடலுக்காக ஆப்களை நாடாமல், அன்றாட ஷாப்பிங் அனுபவத்திலேயே ஒரு துணையைக் கண்டறியும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
