சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இனி மெட்ரோ ரயில்களில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோருக்கு அபராதம் கடுமையாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் பாதுகாப்பையும், வசதியையும் உறுதி செய்வதற்காக நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக, சில பயணிகள் மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் நடந்து கொள்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில், மெட்ரோ ரயில் சட்டம் 2002, பிரிவு 59-ன் கீழ், பின்வரும் செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
* மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, செல்போன்களில் மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் அதிக சத்தத்துடன் பேசுவது.
* செல்போன்களில் உரக்கப் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் மூலம் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தம் எழுப்புவது.
* காதுகளில் ஹெட்போன் அல்லது இயர்போன் அணியாமல், மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் பாடல்களை ஒலிபரப்புவது அல்லது லவுட் ஸ்பீக்கரில் பேசுவது.
இந்தச் செயல்கள் அனைத்தும் மற்றவர்களைத் தொந்தரவு செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கருதுகிறது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA), ஜூன் 19, 2026 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026-ன் கீழ் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மெட்ரோ ரயில்வே நிர்வாகம் புதிய அபராதத் தொகைகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
முன்னதாக, பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அபராதத் தொகை 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளைத் தொடர்ந்து மீறும் நபர்களை உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளது. மெட்ரோ ரயில் என்பது அனைவருக்கும் சொந்தமான ஒரு பொதுச் சொத்து என்றும், அதைச் சுத்தமாகவும் அமைதியாகவும் பராமரிப்பது அனைவரின் பொறுப்பு என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் பயணத்தின்போது மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க, ஹெட்போன்களைப் பயன்படுத்தவும், குறைந்த சத்தத்துடன் பேசவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
