கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ளார். வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் மேற்கொள்ள உள்ள பயணத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு, அவர்களின் தகுதிகளின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான ஆவணங்களையும் முதலமைச்சர் விஜய் வழங்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஜோசப் விஜய் கரூருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இதனால், இந்த பயணம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் என்ற முறையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
எனினும், கரூருக்கு நேரடியாக செல்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் சந்தித்தது அப்போதைய அரசியல் வட்டாரங்களில் சில விமர்சனங்களையும் எழுப்பியது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.