அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் வீடியோவை வெளியிட்டது நண்பர் சரண் ஜெயராமன் தான் என அமைச்சர் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருவதாகவும், இதனால் தனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி, தாம்பரம் துணை ஆணையரிடம் சரண் ஜெயராமன் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரண் ஜெயராமன், "தற்போது அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நான் தான் வெளியிட்டிருப்பேன் என அமைச்சர் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நானும் அமைச்சரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நான் திமுக ஆதரவாளன் என்பதால் நான் தான் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறுகிறார்கள்.
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்பதை கண்டறிவதை விட்டுவிட்டு, யார் வீடியோவை வெளியிட்டார்கள் என்று தேடுகிறார்கள். இது யாருக்கான அரசு? தவெக அரசு தங்கள் அமைச்சரை காப்பாற்ற முயற்சிக்கிறதா? எங்கள் வீட்டிற்கு ஆள் அனுப்புகிறார்கள்.
இப்போது உங்களிடம் தான் அதிகாரம் உள்ளது. சரத் யாரிடம் போதைப்பொருள் வாங்கினார் என்பதை கண்டுபிடியுங்கள். குழந்தை, மனைவியுடன் வந்து விளக்கம் தந்தால் நம்பிவிடுவார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.