ராமநாதபுரம் அருகே சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த அத்தையே இந்த கொடூரத்தை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலம் நெஞ்சை பதறவைப்பதாக அமைந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறையை கொண்டாட ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த ஜூன் 28 அதிகாலை, மின்வெட்டு ஏற்பட்டிருந்தபோது, பாட்டியுடன் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடிய நிலையில், அருகிலிருந்த வீட்டின் உறைகிணற்றில் சிறுமியின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் சொந்த அத்தையான சபரியா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவரை காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தினர் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், அதேசமயம் கணவரின் அக்காள் மகளான சாய் தீப்தி மீது அனைவரும் அதிக பாசம் காட்டுவதாகவும், இதனால் தனக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டதாகவும் சபரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த பொறாமை காரணமாக, அதிகாலையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது சிறுமியை தூக்கிச் சென்று அருகிலிருந்த கிணற்றில் உயிருடன் வீசிக் கொன்றதாக சபரியா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களுக்கிடையேயான பொறாமை காரணமாக சொந்த அத்தையே சிறுமியை கொடூரமாக கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.