சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாடு இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் மூன்று அமர்வுகளாக திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டின் முதல் அமர்வில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுதல், அரசின் திட்டங்களின் தற்போதைய நிலை போன்ற முக்கிய விஷயங்கள் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன. அதிகாரிகள் தங்கள் கருத்துக்களையும், கள நிலவரங்களையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த அமர்வுகள் நடைபெறுகின்றன.
மாநாட்டின் இறுதி நாளில், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். குறிப்பாக, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வது குறித்தும், சட்டம் – ஒழுங்கை திறம்பட பராமரிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு (எஸ்.பி.) அவர் அறிவுரை வழங்கவுள்ளார்.
இந்த மாநாடு, நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும், அரசின் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேலும் செம்மைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.