சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் தனது பதிலுரையில், ‘scripted அவதூறுகளையும், punch dialogue-களையும் மட்டுமே அள்ளிவீசி acting performance’ காட்டியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
பேரவையின் நேரலை கேமராவை சினிமா கேமரா என நினைத்து முதலமைச்சர் பேசியதாகவும், அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி ‘single take-இல் shoot’ செய்ய பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையதல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் பதிலுரையில் மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் குறித்து எந்தப் பதிலும் இல்லை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில் போராடுவதாகக் கொச்சைப்படுத்தியதையும், ‘குட்டிக்கதை சொல்கிறேன்’ என்ற பெயரில் அவர் உளறியதையும் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
‘செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி’ கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் என்றும், எனவே நடிகர் விஜய் என்பதை மறந்து இனியாவது முதலமைச்சராக நடந்துகொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.