தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 18 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில் அமலாக்கத்துறை இந்த சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் சோதனைகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவுரையாளர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.