சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளாளபுரத்தைச் சேர்ந்த 20 வயதான மாணவி கோபிகா, நீட் மறுதேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை எழுதிய தேர்வு ரத்தானதால் அவர் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார்.
மாணவி கோபிகாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவம் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவி அனு கீர்த்தனாவிடமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கோபிகாவின் தந்தை சேகர் கூறுகையில், 'நீட் மறுதேர்வு காரணமாக என் மகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நீட் தேர்வுக்காக படித்து வந்தார். ஏற்கனவே ஒரு முறை தேர்வு எழுதியிருந்தார்' எனத் தெரிவித்தார். மாணவியின் தற்கொலை நீட் தேர்வு குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த துயரச் சம்பவம், தேர்வு முறையின் தாக்கம் குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.