சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?
எம்.வி ஹோண்டியஸ் கப்பலில் பயணித்து கொண்டிருக்கும் 149 பயணிகளில் சிலருக்கு மிக ஆபத்தான ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த உல்லாச கப்பலான எம்.வி ஹோண்டியஸ் என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், நான்கு பயணிகள் சிகிச்சைக்காகக் கப்பலிலிருந்து மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் ஒரு பறவையின் கழிவுகளிலிருந்து கிளம்பிய தூசியை சுவாசித்ததே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல், தசைவலி ஆகியவை ஏற்படும். பின்னர் 72 மணி நேரத்தில் நுரையீரலை பாதித்து உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நோய்க்கு தடுப்பூசியோ, எந்தவித மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அங்கு வரும் மே 11-ம் தேதி பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2008 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சிலருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.