உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், உணவு வணிக நிறுவனங்கள் உணவுகளை வெட்டும்போது அல்லது பதப்படுத்தும் போது துருப்பிடிக்காத தரமான கத்திகள் மற்றும் பிளேடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கையாளுதலின் போது துருப்பிடிக்காத பிளேடுகள், கத்திகள் மற்றும் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI அறிவுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை Tamil Nadu Food Safety Department (TNFSD) வலைதளம் அல்லது மொபைல் செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும், 94440 42322 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ்அப் மூலமும் புகார்களை அனுப்ப முடியும்.
மக்கள் அதிகளவில் வாங்கும் இனிப்பு மற்றும் காரசார உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அரசின் முக்கியப் பணியாக உள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் மூலம், நுகர்வோரின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.