அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை என்றும் கூறினார். இரண்டு நாட்களுக்கு முன் வெளியான வெள்ளை அறிக்கையில் உள்ள விஷயங்கள்தான் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுன் கட்சிப் பதவியில் இல்லை என்றும், அதிமுக அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார் என்றும் தெளிவுபடுத்தினார். மிதுன் அரசியலுக்கு வருவது தவறு என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, 38 நாட்களில் 105 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார். சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்வெட்டால் மக்கள் இரவில் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'பியூஸ் கேரியரை பிடுங்கி சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் உரையில் எதிர்பார்த்த புதிய திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்ததாக அவர் கூறினார்.