2026 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய லீக் ஆட்டத்தில், 200 ரன்களைக் கடந்து மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இப்போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியும் பெற்றது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இது உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி மட்டுமே உலகக் கோப்பையில் 200 ரன்களைக் கடந்திருந்தது. தற்போது இந்த அரிய சாதனையை படைத்த உலகின் இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 74 ரன்களும், ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 55 ரன்களும் விளாசி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவர்களில் 115 ரன்கள் குவித்தனர். இறுதி நேரத்தில் ரிச்சா கோஷ் (8 பந்துகளில் 20 ரன்கள்) மற்றும் தீப்தி சர்மா (2 பந்துகளில் 10 ரன்கள்) அதிரடியாக விளையாடி இந்திய அணியை 209 ரன்களுக்கு உயர்த்தினர்.
பின்னர் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து கேப்டன் பாபெட் டி லீடே அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். அறிமுகப் போட்டியில் விளையாடிய நந்தினி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இருப்பினும், இந்திய ஸ்பின்னர் ஸ்ரேயங்கா பாட்டீல் தனது முதல் பந்திலேயே கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ட்ரெச்சரில் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டது அணிக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூன் 21 அன்று மான்செஸ்டரில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.