வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கி, வெற்றிகளைப் பெற காலபைரவரை வழிபடுவது சிறந்த பலனைத் தரும். குறிப்பாக, வளர்பிறை அஷ்டமி நாளில் செய்யப்படும் ஒரு சூட்சுமமான வழிபாடு, அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு, காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றும்.
சிவபெருமானின் மறு அவதாரமான காலபைரவரை வழிபடுவதால் துர்மரணங்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லை அகலும். மேலும், நவகிரகங்களின் குருவாக இவர் திகழ்வதால் நவக்கிரக தோஷங்களை நீக்கி நல்வழியை காட்டுவார். தேய்பிறை அஷ்டமியில் கடன் பிரச்சினைகள் தீரவும் காலபைரவரை வழிபடலாம்.
அஷ்டமி திதி காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. தேய்பிறை அஷ்டமி கடன் பிரச்சனைகள் தீர்க்கவும், வளர்பிறை அஷ்டமி செல்வ வளம் அதிகரிக்கவும், புதிய காரியங்கள் தடையின்றி தொடங்கவும் வழிவகுக்கும். தடைகள் தொடர்ந்தால், வளர்பிறை அல்லது தேய்பிறை அஷ்டமி நாட்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலோ இந்த சூட்சும வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தடைகளைத் தகர்க்கும் வெட்டிவேர் மாலை வழிபாடு: ஒரு வெட்டிவேர் மாலையை பன்னீரில் நனைத்து, காலபைரவருக்கு சாற்ற வேண்டும். அவருடன் ஜவ்வாது, புனுகு போன்ற நறுமணப் பொருட்களையும் அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். பைரவர் சந்நிதியில் 8 நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி, குறைகளை நீக்க மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். வழிபாடு நிறைவேறிய பின், பைரவருக்கு அபிஷேகப் பொருட்கள், வஸ்திரம் சமர்ப்பித்து நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.