தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் கோரிக்கைக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'தமிழகத்தில் 3.5 சதவீதமாக உள்ள இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அமைச்சர் ஷாஜகான் பேட்டியளித்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். மதத்தின் அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு வழங்க இயலாது. எனவே, ஏற்கனவே உள்ள இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது முறையல்ல. இதனால் பிற்படுத்தப்பட்ட இந்து மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தன்னை 'அனைவருக்குமான அரசு' என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு, சமூகநீதியைக் குலைக்கும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் வகையிலும் எழுந்துள்ள இந்த கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்' என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை முதலமைச்சரிடமும் எடுத்துரைத்துள்ளதாகவும், உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார்.