நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகள் கிடைத்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கேள்வி எழுப்பியதற்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது. இபிஎஸ் உடன் 'ஆமாம் சாமி' போடுபவர்கள் மட்டுமே உள்ளனர். குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்' என்று விமர்சித்தார்.
தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர், ஆனால் ஈபிஎஸ் உணரவில்லை என்றும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார். 'சீட்டுக்கட்டுகளை போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்கள், பணத்தை செலவு செய்தவர்கள் வேதனையுடன் வெளியேறுகின்றனர். வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை துரோகிகள் என்பதா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக தலைமை சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொண்டதாகவும், திமுகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டபோதே அதிமுக தனது சுயத்தை இழந்துவிட்டதாகவும் சி.வி.சண்முகம் கூறினார். 'திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் அவர் துரோகி ஆகிவிட்டாரா?' என்றும் அவர் உதாரணம் காட்டினார்.
பாமக கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் 7, 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொண்டர்களால் உருவான இயக்கம், தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாகவும், தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவர இபிஎஸ் நாடகம் ஆடுவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.