இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன், நவீன கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சி குறித்தும், பல்வேறு ஃபார்மட்களில் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர்கள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். 'மைகேல்' ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், டி20 கிரிக்கெட்டின் எழுச்சி, டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
தில்ஷன் தனது பேட்டியில், 'கிரிக்கெட் விளையாட்டு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முன்பு ஒருநாள் போட்டிகளில் 250 அல்லது 260 ரன்கள் எடுத்தாலே அது பெரிய ஸ்கோராகக் கருதப்பட்டது. ஆனால் இன்று 300 ரன்கள் எடுத்தால் கூட அது பாதுகாப்பான ஸ்கோர் இல்லை என்ற நிலை உள்ளது. டி20 கிரிக்கெட் வீரர்களின் ஆட்ட அணுகுமுறையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. இது அமெரிக்கா, கனடா போன்ற புதிய நாடுகளுக்கு கிரிக்கெட்டைக் கொண்டு சென்று அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. என்னைப் பொறுத்தவரை டி20 ரசிகர்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு. ஆனால் ஒரு வீரரின் உண்மையான திறமை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் மூலமாகவே மதிப்பிடப்படுகிறது' என்று தெரிவித்தார்.
மேலும், புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர்கள் எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதால் எங்கும் தப்பிப்பிழைக்கிறார்கள் என்றும், டி20 கிரிக்கெட்டில் வீசப்படும் ஒவ்வொரு பந்துக்கும் பந்துவீச்சாளர் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் தில்ஷன் குறிப்பிட்டார். 'பேட்டர்கள் இப்போது தில்ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் எனப் பல்வேறு புதுமையான ஷாட்டுகளை ஆடுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் இனி ஒரே லைன் மற்றும் லென்த்தை மட்டுமே நம்பி பந்துவீச முடியாது. சூழ்நிலைகளுக்கும் ஆட்டத்தின் தன்மைக்கும் ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக்கொள்ளும் பந்துவீச்சாளர்களே சிறந்தவர்களாக உருவாகிறார்கள். இதனை நாம் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்' என்றும் அவர் கூறினார்.
பேட்டர்கள் குறித்தும் பேசிய தில்ஷன், 'சில பேட்டர்கள் அனைத்து ஃபார்மட்களுக்கும் ஏற்ப தங்களை எளிதாக மாற்றிக்கொள்கிறார்கள், சிலரோ திணறுகிறார்கள். சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்களைப் பாருங்கள். அவர்கள் ஃபார்மட்டுக்குத் தகுந்தபடி தங்களின் ஆட்டத்தை எப்படி மாற்றுவது என்பதைப் புரிந்து வைத்துள்ளனர். ஆனால் 3 ஃபார்மட்களிலும் ஒரே மாதிரியாகச் சாதிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அதனால்தான் உலக அளவில் பெரும்பாலான நாடுகள் இப்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்குத் தனித்தனி அணிகளையும், வெவ்வேறான கேப்டன்களையும் நியமிக்கத் தொடங்கியுள்ளன' என்று சுவாரஸ்யமாகப் பதிலளித்தார்.
மகளிர் கிரிக்கெட் குறித்தும் தில்ஷன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். 'கடந்த சில வருடங்களில் மகளிர் கிரிக்கெட் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று தொழில்முறை தரம் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றில் ஆண்களின் கிரிக்கெட்டுக்கும் பெண்களின் கிரிக்கெட்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதும் எனக்குத் தெரிவதில்லை. அவர்கள் 250 ரன்களுக்கு மேல் இலக்குகளைத் துரத்துகிறார்கள், மைதானத்தில் டைவ் செய்து பந்துகளைத் தடுக்கிறார்கள், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு வருகிறார்கள். இதனால் வரவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை' என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.