கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரை பெண்கள் செருப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அக்கடவல்லியில் இருந்து பண்ருட்டி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் ஓட்டுநர், பேருந்தின் குறுக்கே வந்த இருசக்கர வாகன ஓட்டியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட பேருந்தில் இருந்த 10 பெண்கள், ஓட்டுநர் தங்களைத் தான் திட்டுவதாக நினைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓட்டுநர் அந்த பெண்களை பேருந்திலிருந்து நடுவழியில் இறக்கிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வேறு பேருந்தில் ஏறி பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த பெண்கள், பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுநரை பேருந்து நிலையத்திலேயே சுற்றி வளைத்து செருப்பால் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற ஓட்டுநர், தன்னை தாக்கிய பெண்களில் ஒருவரை பதிலுக்கு தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து ஓட்டுநரை பெண்கள் செருப்பால் தாக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.