சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியின் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன், தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததன் மூலம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
திருப்புவனம் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகள் தேவமித்ராவுடன் வசித்து வருகிறார். தேவமித்ரா இதற்கு முன்னர் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் தனது மனைவியுடன் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று நேரில் சென்று, தனது மகள் தேவமித்ராவை ஆறாம் வகுப்பில் முறையாகச் சேர்த்துள்ளார். இந்தச் செயல் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராவிடம் பள்ளியின் தேவைகள் குறித்தும், மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் கேட்டறிந்தார். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும், மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.