கேரளாவில் இருந்து திருச்சி சிமெண்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, நெல்லை துறையூரில் டயர் பஞ்சராகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த லாரியில் இருந்து துர்நாற்றத்துடன் ஆயிரக்கணக்கான புழுக்கள் சாலையில் கொட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 15,070 டன் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த இந்த லாரி, கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திடீரென சாலையில் லாரி பழுதாகி நின்றபோது, அதிலிருந்து கொட்டிய புழுக்கள் சாலையில் பரவி சுகாதார சீர்கேட்டையும், நோய் பரவும் அச்சத்தையும் ஏற்படுத்தின.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தூய்மைப் பணியாளர்கள் சாலையில் கொட்டிய புழுக்கள் மீது ப்ளீச்சிங் பவுடரை தூவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 'கிளீன் கேரளா' நிறுவனம் விதிமுறைகளை மீறி அழுகிய கழிவுகளை அனுப்பியது குறித்தும், லாரியில் இருந்த கழிவுகளின் தன்மை குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சுகாதார அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து கொட்டிய புழுக்கள் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.