தமிழக சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதன் மூலம், தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முடிவு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. 2024-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், 2026-ல் ஒரு மாபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். நடிகர் சத்யராஜ் பேசுகையில், 'உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து விலக வேண்டும். விஜய் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது' என்றார்.
நடிகர் சிவக்குமார் தனது ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் ஒழுங்கான வாழ்க்கை முறை என்றும், காபி, டீ அருந்தாமல் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இன்றைய தலைமுறை குடும்பத்தினர் அனைவரும் செல்போனில் மூழ்கி தனித்தனியாக இருப்பதாகவும், செல்போனை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது மனநலத்திற்கு நல்லது என்றும், தனக்கு 85 வயது ஆகியும் தினமும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவதாகவும் அவர் கூறினார்.
அரசியல் குறித்துப் பேசிய சிவக்குமார், 'மக்கள் தான் நீதிபதிகள். யார் வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். 90 சதவீதம் முதல் முறை வாக்களித்தவர்கள் பணம் வாங்காமல் வாக்களித்துள்ளனர். எனது பேரன்கள், பேத்திகள் வாக்களிக்கும்போது அதை தவறு என்று சொல்ல நாம் யார்? விஜய் நல்லது செய்வார் என்று நம்புவோம்' என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும், காமராஜர் போன்ற தலைவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டதையும், தற்போதைய திமுக, அதிமுக ஆட்சிகள் மீதுள்ள அதிருப்தியால் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். நடிகர் சத்யராஜ், திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து, திராவிட மாடல் அரசுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் தனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.