மான்ட்ரியல்: இந்த ஆண்டு நடைபெற்று வரும் பார்முலா1 கார் பந்தயத் தொடரின் 5-வது சுற்றான கனடா கிராண்ட்பிரி, மான்ட்ரியல் ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது. உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த சீசனில், 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்றனர்.
305.270 கிலோமீட்டர் தூரத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில், மெர்சிடஸ் அணியின் இத்தாலி வீரர் கிமி அன்டோனெல்லி அபாரமாக செயல்பட்டார். அவர் 1 மணி நேரம் 28 நிமிடங்கள் 15.758 வினாடிகளில் இலக்கை கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம், இந்த சீசனில் அவர் தொடர்ந்து 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கிமி அன்டோனெல்லிக்கு இந்த வெற்றியின் மூலம் 25 புள்ளிகள் கிடைத்துள்ளன. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பார்முலா1 பந்தயத்தில் ஒரு இத்தாலிய வீரர் தொடர்ந்து 4 பந்தயங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனை அவரைப் பந்தய உலகில் மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கிமி அன்டோனெல்லி தனது சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் இதேபோன்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
