வேறு திருமணம் செய்யப் போவதாக மனைவியின் கூறியதால், கணவன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வடசேரி காட்டு நாயக்கன் பகுதியைச் சேர்ந்த செந்தில் (36), நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சுமிதா (34) என்பவருக்கும் திருமணமாகி, சஜின் (14) என்ற மகனும் உள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் வசித்து வந்தனர்.
செந்திலுக்கும், சுமிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால், சுமிதா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். செந்தில் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'உன்னுடன் வாழ பிடிக்கவில்லை, நான் மறு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறி சுமிதா தகராறு செய்துவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானம் செய்து செந்தில் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்ததும், மகனை வெளியே விளையாட அனுப்பிவிட்டு, செந்தில் தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகன், தனது தந்தை மற்றும் தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.