நடிகையும் எம்.பியுமான கங்கனா ரனாவத், கழுத்தில் தாலியுடன் காரில் ஏறி செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின. இதற்கு கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.
"நான் பல்வேறு பகுதிகளில், படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். நான் கதாபாத்திரத்திற்கான மேக்கப்பில் இருந்தபோது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நடிகை, பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் பல்வேறு தோற்றத்தில் இருப்பது வழக்கம். திருமணமான பெண்ணின் தோற்றத்தில் இருப்பதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகை கங்கனா ‘குயின்’ படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் இருந்து அவர் மருத்துவரை சந்திக்கச் செல்லும் போது சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் ஒரு நடிகை என்பதால் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தோற்றமளிப்பது இயல்பு என்றும், ரகசிய திருமணம் செய்ய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
