கோவை மாவட்டம் சூலூர் அருகே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். இந்த துயர சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சிறுமி உயிரிழந்ததையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ 7 லட்சத்துக்கான காசோலையையும் அவர்கள் வழங்கினர். இந்த சந்திப்பின்போது, தமிழக முதல்வர் விஜய் சிறுமியின் தந்தை மற்றும் பாட்டியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இந்த கொடூர சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மாவட்ட எஸ்.பி கவுதம் கோயல் ஆகியோர் உடனிருந்தனர்.
சிறுமி குடும்பத்தினரிடம் பேசிய முதல்வர் விஜய், 'இந்த சம்பவம் குறித்து கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சிறுமியை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன். உங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்ததாக சிறுமியின் தந்தையும் பாட்டியும் தெரிவித்தனர். மேலும், இது போன்ற எந்த ஒரு சம்பவமும் இனி தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது என்றும், வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தமிழன் பார்த்திபன் கூறினார்.
இதற்கிடையில், கோவை சிறுமியின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, தமிழக அமைச்சர்களான தமிழன் பார்த்திபன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் அவர்களை நேரில் சந்தித்து பேசினர். சிறுமியின் குடும்பத்தினருக்கு வீடு இல்லை என்ற தகவலை அறிந்த தமிழக அமைச்சர்கள், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
