செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், பரதன்தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள், கடந்த மாதம் 11-ந் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு பெற்றோருடன் உறங்கச் சென்றார். மறுநாள் அதிகாலை சிறுமி மாயமானதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். முதலில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படை அமைத்துத் தேடினர். போதிய துப்பு கிடைக்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
கடந்த 22 நாட்களுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. விக்ரமன் நேற்று ஆலம்பூண்டி கிராமத்திற்கு நேரில் வந்து சிறுமியின் தந்தை வடிவேலு, தாய் பவானி, பாட்டி மற்றும் எதிர்வீட்டுப் பெண் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குச் சென்ற டி.ஐ.ஜி. விக்ரமன், விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.க்கள் வேல்முருகன், கீதா ஆகியோரிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்நிலையில், இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் செஞ்சி அடுத்த சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி மாயமான பகுதிக்கு அருகிலுள்ள பரதன்தாங்கல் ஏரி அருகே முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்றைக் கண்டெடுத்தனர். மீட்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது என்பது குறித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடி காப்புக்காடு பகுதியில் மேலும் தடயங்கள் கிடைக்குமா என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புதர்கள், பாறை இடுக்குகள் என ஒவ்வொரு இடமாக சல்லடை போட்டுத் தேடியபோது, பரதன்தாங்கல் ஏரி அருகே உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது.
உடனடியாக போலீசார் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து, எலும்புக்கூட்டை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இன்றுடன் சிறுமி மாயமாகி 34 நாட்கள் ஆகின்றன. ஆனாலும் சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 50 வயதுடைய ஆணுடையதாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எலும்புக்கூட்டின் அருகே வேட்டி, சட்டை, மதுபாட்டில், விஷ பாட்டில், செருப்பு ஒன்றும் கிடந்துள்ளது. மதுபாட்டில் கீழ்பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்டதும், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
