ஐபிஎல் 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய சாதகமான சூழல் நிலவும் என்று கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டிரேட் மூலம், ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் அணிக்கு வழங்கிவிட்டு, அந்த அணியிடமிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங், சர்துல் தாக்கூர், தீபக்சாகர், மிட்செல் சாண்ட்னர், வில் ஜேக்ஸ், ரூதர்போர்ட், நமன் தீர் போன்ற வீரர்களைக் கொண்ட ஒரு வலுவான அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழும்.
இது தொடர்பாக அஸ்வினுடன் நடைபெற்ற உரையாடலில் பேசிய கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா, மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்ஸ்தீப் சிங்கை வாங்கிய பிறகு, டிரெண்ட் போல்டை ஏலத்தில் விடுவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு சுமார் 12.50 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும், தீபக் சாகரை சுமார் 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், அவரையும் விடுவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், இரண்டு வீரர்களை விடுவித்து சுமார் 21 கோடி ரூபாயுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மினி ஏலத்திற்கு செல்லும்.
மேலும் சில வீரர்களை விடுவிப்பதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கையில் அதிக பணம் இருக்கும். இந்த பணத்தைக் கொண்டு, ஒரு திறமையான இந்திய வேகப்பந்துவீச்சாளரை வாங்கிவிட்டால், அந்த அணிக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பிரசன்னா கூறியுள்ளார். தற்போது கையில் அதிக பணம் வைத்திருப்பதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அல்லது ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் அல்லது ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என மூன்று வீரர்களை வாங்க முயற்சி செய்யும்.
இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் மேலும் பலமடையும். ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் தீர், வில் ஜாக்ஸ், மிட்செல் சாண்ட்னர், ரூத்தர் போர்ட், பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களைக் கொண்டு ஒரு பலமான அணியை கட்டமைக்க முடியும்.
சுழற்பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, வில் ஜாக்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னரை வைத்து ஆறு ஓவர்கள் வீச முடியும். மேலும், நமன் தீர் கூடுதல் வீரராக உள்ளார். பும்ரா மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் எட்டு ஓவர்களை வழங்குவார்கள். எனவே, கூடுதலாக ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்தால் போதும் என்று பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, கொல்கத்தா அணி கேமரான் கிரீன் மற்றும் பதிரனாவை விடுவிக்கும் என்றும், இதன் மூலம் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள்தான் மினி ஏலத்தில் அதிக பணத்துடன் களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி ஏலத்திற்கு வரவே தேவையில்லை என்றும் பிரசன்னா கூறியுள்ளார்.
