கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 5 நாட்களாகவே இந்த நிலை நீடித்து வருவதால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் தொடங்கி ஆக்டோபஸ் படை வீரர்கள் அலுவலகம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஸ்ரீவாரி கோவில் வளாகம், லட்டு விற்பனை மையங்கள் மற்றும் அதிக பக்தர்கள் கூடும் இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களைப் பாதுகாக்க, கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் தரையில் 'சிந்தடிக் எனாமல் கூல் பெயிண்ட்' பூசப்பட்டுள்ளது. பாத கங்கையம்மன் கோவில் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரையிலான தரிசனப் பாதைகளில் தற்காலிக கழிப்பறைகளும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
வெளியில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் தாகம் தீர்க்க குடிநீர், பசி போக்க அன்னப்பிரசாதங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், நடமாடும் குடிநீர் தொட்டிகள் மூலம் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலின் தன்மைக்கு ஏற்ப, வெளிவட்ட சாலையில் நடமாடும் முதலுதவி மையமும் தயார் நிலையில் உள்ளது.
தங்கும் வசதி பற்றாக்குறை காரணமாக, பக்தர்கள் சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் தங்கி ஓய்வெடுக்கின்றனர். தேவஸ்தானத்தால் ஒரே நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தங்கும் வசதி செய்ய முடிகிறது. மேலும், 9 ஆயிரம் லாக்கர்கள் (பொருட்கள் வைப்பறைகள்) இருந்தாலும், அவை அனைத்தும் பக்தர்களின் அதிகப்படியான வருகையால் நிரம்பிவிட்டன. கடந்த 5 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 213 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். இதில், கடந்த 3 நாட்களில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், கடந்த 5 நாட்களில் சுமார் 19 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், தேநீர், காபி, பால் மற்றும் மோர் வழங்கப்பட்டுள்ளது.
