தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற்று ஆந்திரா – ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு எந்தளவு பாதிப்பு இருக்கும் என்பது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் விரிவாக விளக்கியுள்ளார்.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, அக்டோபர் 26ஆம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.
இந்த புயலுக்கு 'அர்னாப்' என பெயரிடப்பட்டுள்ளது. இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை நோக்கி வராமல் விலகிச் சென்றால், தமிழகத்தில் மழைப்பொழிவு குறையக்கூடும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புயல் உருவான பிறகு, தமிழ்நாட்டில் மழை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில், 'பருவமழையைப் பொறுத்தவரை, அக்டோபர் மாத தொடக்கத்தில் நாங்கள் சற்று எதிர்மறையாக இருந்தோம். ஆனால் இப்போது மழைப்பொழிவு 20% அதிகமாக உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'வங்கக்கடல் மற்றும் அந்தமான் அருகே மத்தியக் கடலில் காற்றழுத்த பகுதி உள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். அப்படி அது தமிழ்நாட்டை விட்டு வட ஆந்திரா பக்கம் சென்றால், தமிழ்நாட்டிற்கு சுத்தமாக மழை இருக்காது. இதனால் புயல் உருவான பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிடும். காற்றழுத்த பகுதி மூலமாக நல்ல மழை கிடைத்து வருகிறது' என்று விளக்கினார்.
எல் நினோ ஆண்டுகளில் வங்கக் கடலில் புயல் குறைவாகவே உருவாகும். ஆனால் தற்போது உருவாகியுள்ள இரு காற்றழுத்த பகுதிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வலுப்பெற்றுள்ளன. இதனால் அக்டோபர் 26ஆம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. எல் நினோ ஆண்டுகளில் கடுமையான வெயில் இருக்கும் என்பதால், இந்த மழைப்பொழிவை வரவேற்க வேண்டும். வரும் நாட்களில் பெய்யும் மழை தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது தென் மாவட்டங்களில் நல்ல நீர்வரத்து இருப்பதை காண முடிகிறது. குறிப்பாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பல பகுதிகளில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இந்த மழைப்பொழிவு விவசாயத்திற்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
