ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்தில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, சுவீடன் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அரசியல் மற்றும் வணிக தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி போன்ற துறைகளிலும் ஆலோசனைகள் நடைபெற்றன.
சுவீடனில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' வழங்கப்பட்டது. இது உலகளவில் மோடிக்குக் கிடைக்கும் 31-வது உயரிய கவுரவமாகும். சுவீடன் பயணத்தை முடித்ததும், பிரதமர் மோடி நார்வேக்குச் சென்றார். அங்கு அவரை அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் விமான நிலையத்திலேயே நேரில் சென்று வரவேற்றார்.
சமீபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் முதன்முறையாக நார்வே செல்லும் இந்தியப் பிரதமர் மோடி இதுதான் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது இந்திய-நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நார்வே மன்னர் 5-ம் ஹரால்டு மற்றும் அரசி சொஞ்சா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். மேலும், பிரதமர் ஸ்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார். நாளை ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.