கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றியுள்ள இந்த கூட்டணி, 10 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு, கேரளாவின் அடுத்த முதல்-மந்திரியாக யார் பதவியேற்பது என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சில நாட்கள் இழுபறி நீடித்தது. அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, 10 நாட்கள் இழுபறிக்கு பிறகு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற வி.டி.சதீசன், உடனடியாக கவர்னர் ஆர்.வி.அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு பெற்றார். இதனையடுத்து, திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கேரளாவின் புதிய முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பொறுப்பேற்றார். அவருக்கு கவர்னர் ரகசிய காப்பு பிரமாணமும், பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்ற உடனேயே நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி சதீசன் வெளியிட்டார். குறிப்பாக, கேரளாவில் பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், முதியோர் நலனுக்காக ஒரு தனி துறை உருவாக்கப்படும் என்றும், ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் கேரள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.