பெங்களூருவில் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரது உடலுடன் மூன்று நாட்கள் வாழ்ந்த கணவன், ஒரு மாதத்திற்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ். நகரில் உள்ள அக்ரஹாரா லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில், சிதைந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் அனுசுயா பெஹாரா என அடையாளம் காணப்பட்டது. அவரை கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது கணவர், 32 வயதான சாகர் சந்திர ராவத், பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், ஆகஸ்ட் 11 அன்று, சம்பிகேஹள்ளி அருகே உள்ள தங்களது வாடகை வீட்டில், பணப் பிரச்சினை தொடர்பாக அனுசுயா பெஹாராவுக்கும் சாகர் சந்திர ராவத்துக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதத்தின் போது, சாகர் சந்திர ராவத் தனது மனைவி அனுசுயாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மனைவியின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த சாகர் சந்திர ராவத், கொலை செய்த நான்காவது நாளான ஆகஸ்ட் 16 அன்று, அதிகாலை சுமார் 3 மணியளவில், அனுசுயாவின் உடலை ஒரு கட்டிலில் சுற்றி, தனது வீட்டிற்கு அருகிலுள்ள காலி மனையில் வீசியதாக ஒப்புக்கொண்டான். அதன் பிறகு, அவன் தனது வாடகை வீட்டை காலி செய்துவிட்டு, தான் வேலை செய்யும் ஹோட்டலில் தங்கி வந்துள்ளான்.
சம்பவம் நடந்த காலி இடத்தின் உரிமையாளர், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர்.
இறந்தவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவரது கழுத்து, கைகளில் இருந்த நகைகளைக் கொண்டு காவல்துறையினர் பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்தனர். இதன் அடிப்படையில், சாகர் சந்திர ராவத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விசாரணையில், இந்த தம்பதியினர் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டு, பெங்களூருவில் வேலை தேடி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
