2025 ஐபிஎல் தொடரின் போது, ஒரு புக்மேக்கருக்கு பிளேயிங் 11 விவரங்களை ஒரு சிஎஸ்கே வீரர் கசியவிட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க உள்ளது. ஊழல் விவகாரங்களில் எந்தவிதமான சகிப்புத்தன்மையும் கடைபிடிக்கப்படாது என்றும், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தெஹல்கா நடத்திய ஒரு ஸ்டிங் ஆபரேஷன் மூலம், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மீது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விசாரணையில், முன்னாள் ரஞ்சி கோப்பை வீரரான ரசித் பாட்டியா, ஒரு புக்மேக்கராக வேடமிட்டிருந்த ரகசிய நிருபரிடம் பேசுகையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு சிஎஸ்கே வீரர் மூலம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அணியின் பிளேயிங் 11 விவரங்களை தனக்கு பெற முடிந்ததாகக் கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, 2025 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஐந்து போட்டிகளின் பிளேயிங் 11 விவரங்களை லண்டனைச் சேர்ந்த புக்மேக்கர்களுக்கு ஸ்னாப்சாட் செயலி மூலம் அனுப்பி, மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக பாட்டியா தெரிவித்துள்ளார். இந்த முக்கிய தகவல்களை வழங்கியதற்காக, அவருக்கு ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3 கோடி ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026 சீசனிலும் அந்த வீரர் ஏலத்தில் எடுக்கப்பட்டால், சிஎஸ்கே அணியின் பிளேயிங் 11 விவரங்களை முன்கூட்டியே பெற்றுத் தருவதாக பாட்டியா உறுதியளித்திருந்தார். இருப்பினும், அந்த வீரருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்தத் திட்டம் தடைபட்டதாக அவர் பின்னர் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிஎஸ்கே வீரரின் பெயர் நேரடியாக வெளியிடப்படவில்லை. அதேபோல், பாட்டியா கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுமட்டுமின்றி, டெல்லி பிரீமியர் லீக் போட்டிகளிலும் மேட்ச் ஃபிக்சிங் செய்ய பாட்டியா முன்வந்துள்ளார். அதே வீரரை மெதுவாக விளையாட வைக்கவோ அல்லது ரன் அவுட் செய்ய வைக்கவோ முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இந்தத் தகவல்கள் உறுதிபடுத்தப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.
வன்ஷ் பேடி என்பவர் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தார். கணுக்கால் காயம் காரணமாக அவர் பாதி சீசனிலேயே விலகினார். பின்னர் 2026 சீசனில் அவர் அணியில் தக்கவைக்கப்படவில்லை, ஏலத்திலும் விற்கப்படாமல் போனார். சமூக ஊடகங்களில் சிலர் இவரை இந்தக் குற்றச்சாட்டுகளோடு ஒப்பிட்டுப் பேசி வந்தாலும், தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதற்கு முன்பாக, சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட வரலாறும் உள்ளது. 2013 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கியப் பொறுப்பில் இருந்த குருநாத் மெய்யப்பன் பந்தயத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 2016 மற்றும் 2017 ஆகிய இரு சீசன்களில் விளையாட அந்த அணிக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய குற்றச்சாட்டுகள் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.
