தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட பெண் கால்நடை உதவி மருத்துவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படாமல், பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் மொத்தம் 3,300 கால்நடை உதவி மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 30 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மூலம் பணிக்கு வந்துள்ள பெண் கால்நடை உதவி மருத்துவர்கள், மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியலில் கடைசியில் உள்ளனர். இதனால், பொது கலந்தாய்வு மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடைபெற்றால், 400க்கும் மேற்பட்ட பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.
இது குறித்து பெண் மருத்துவர்கள் கூறுகையில், 'சுகாதாரத் துறையில் உள்ளதைப் போல, நிலைய பணி மூப்பு அடிப்படையில் மாவட்டங்களுக்குள் முதல் நாளும், மாவட்டங்களுக்கு இடையே அடுத்த நாளும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டால், பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்' என தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு, 300க்கும் மேற்பட்ட பெண் கால்நடை உதவி மருத்துவர்களின் குடும்பங்களைக் காக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.