கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 6 வருட காதல் விவகாரத்தில், பேச மறுத்த காதலியின் மீது இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து விரிவாக காண்போம். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சின்னபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 25), சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். இவரும், பண்ருட்டியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த இளம்பெண், பண்ருட்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் விற்பனையாளராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஓராண்டாகவே இளம்பெண், காதலன் சந்தோஷிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இளம்பெண் பண்ருட்டியில் உள்ள மருந்தகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதியம் 12.30 மணியளவில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத சமயத்தில், கம்ப்யூட்டரில் மருந்தின் இருப்பு விவரங்களை அவர் சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த சந்தோஷ், '6 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பது ஏன்? பேசுவதை நிறுத்தியது ஏன்?' என்று கேட்டு காதலியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இளம்பெண்ணின் கழுத்து, கை மற்றும் உடல் பகுதிகளில் மொத்தம் 6 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கொடூரமான தாக்குதலில் வலி தாங்க முடியாமல் இளம்பெண் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சந்தோஷை விரட்டிப் பிடித்து, அவரிடமிருந்து கத்தியைப் பறிமுதல் செய்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், காயமடைந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள், தாக்குதல் நடத்திய சந்தோஷை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
