சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை உலகக்கோப்பை தொடரானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ளது. மொத்தம் 57 போட்டிகள் இந்த பிரம்மாண்ட தொடரில் நடத்தப்பட உள்ளன.
தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்களும், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்களும், நமீபியாவில் 1 மைதானமும் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நமீபியா நாடு தனது வரலாற்றிலேயே முதன்முறையாக ஐசிசி-யின் ஆண்கள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, கடந்த 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தியிருந்தன.
தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்: ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானம், டிஷ்வானேயில் உள்ள செஞ்சூரியன், கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம், கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க், புளூம்பொன்டைனில் உள்ள மங்காங் ஓவல், பார்ட்டில் உள்ள போலண்ட் பார்க், மற்றும் குகோம்போ சிட்டியில் உள்ள பஃபலோ பார்க்.
ஜிம்பாப்வேயில் உள்ள மைதானங்கள்: ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், மற்றும் விக்டோரியா ஃபால்ஸில் உள்ள ஃபேல் மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம்.
நமீபியாவில் உள்ள ஒரே மைதானம்: விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானம்.
2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முற்றிலும் புதிய போட்டி வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சூப்பர் சீரிஸ் மற்றும் சூப்பர் 7 போன்ற புதிய சுற்றுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தரவரிசையில் 12 முதல் 14 வரையிலான இடங்களில் உள்ள அணிகள், உலகக்கோப்பை தொடருக்குத் தகுதி பெறுவதற்காக சூப்பர் சீரிஸ் தகுதிச் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் ஒரே ஒரு அணி, உலகக்கோப்பையின் லீக் சுற்றுக்குத் தகுதி பெறும்.
லீக் சுற்றின் போது, முதன்மைத் தொடருக்குத் தகுதியடையும் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த தொடக்க சுற்றில் மொத்தம் 30 லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் இரண்டு பிரிவுகளையும் சேர்த்து அடுத்த சிறந்த இடத்தைப் பிடிக்கும் ஒரு அணி என மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 7 சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் மொத்தம் 21 போட்டிகள் நடத்தப்படும்.
சூப்பர் 7 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதலாவது அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியும், 4-வது இடம் பிடிக்கும் அணியும் மோதும். இரண்டாவது அரையிறுதியில் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.
