பட்டியல் சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ள 200 ரோஸ்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மக்கள் தேசம் கட்சித் தலைவர் ஆசைத்தம்பி வலியுறுத்தியுள்ளார்.
'உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி' என்ற நூல் வெளியீட்டு விழா மதுரை மாட்டுத்தாவணியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மக்கள் தேசம் கட்சித் தலைவர் ஆசைத்தம்பி, 2009-ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீடு முறை அருந்ததியர் சமூகத்திற்கு எதிரானது அல்ல என்றும், ஆனால் அது அமல்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக பறையர், தேவேந்திரர், குறவர் போன்ற பிற பட்டியல் சமூக மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அரசுக்கும் தங்களுக்குமான இந்த உரையாடலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற திமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுக அரசு கொண்டுவந்த 200 ரோஸ்டர் முறையால் இட ஒதுக்கீட்டில் பின்தங்குவதாகவும், எனவே உடனடியாக அந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வணங்காமுடி பதிப்பகம், பண்டிதர் பதிப்பகம், அயோதிதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் எழுதிய 'உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி' என்ற நூலின் வெளியீட்டு விழா, மாட்டுத்தாவணி ராமசுப்பு அரங்கில் அ.தமிழ்முரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் தேசம் கட்சி தலைவர் அ.ஆசைத்தம்பி நூலினை வெளியிட, பேராசிரியர் கி.கதிரவன் மற்றும் வழக்கறிஞர் பெரியார் வேந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில், உள் ஒதுக்கீட்டை மறுசீரமைப்பு செய்வதுடன் 200 ரோஸ்டர் முறையை நீக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியல் சமூக மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நூல் மதிப்புரையை நாம் தமிழர் கட்சி புதுகை ஜெயசீலன், நீலப்புலிகள் இயக்கம் தலைவர் டி எம் புரட்சிமணி, பேராசிரியர் சி.லட்சுமணன், இயக்குநர் வீரபாண்டியன், மனித உரிமை செயல்பாட்டாளர் கி.ஆறுமுகம், எழுத்தாளர் சாத்தன் குன்றன், வழக்கறிஞர் செ.பாஸ்கர், மூவேந்தர் புலிப்படை தலைவர் மு.க.வையவன், தமிழர் தேசிய கழகத் தலைவர் வழக்கறிஞர் கணேசன் மூர்த்தி ஆகியோர் வழங்கினர். நன்றியுரையை ச.ஆண்டாள் நாச்சியார் நிகழ்த்தினார்.
பேராசிரியர் லட்சுமணன் பேசுகையில், உள் இடஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு வழங்கலாமா என்று ஆராய நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்தது. அந்த ஜனார்த்தனன் கமிட்டி அறிக்கை, அமல்படுத்திய 10 ஆண்டுகளுக்குப் பிறகு இதனை மறுவரையறை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது. ஆனால், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக உள் இடஒதுக்கீடு அமலில் இருப்பதால், ஜனார்த்தன கமிட்டியின் அறிக்கையின் பிரகாரம் இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பேராசிரியர் கதிரவன் பேசுகையில், உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு 16 ஆண்டுகள் ஆகியுள்ளதால், எஸ்சி மற்றும் எஸ்சிஏ பட்டியல் பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அடைந்த தேர்ச்சியை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
