தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், பாமக சார்பில் முதல்வர் விஜய்க்கு சௌமியா அன்புமணி MLA பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "விவசாயம் செய்ய வாங்கிய கடனை செலுத்த முடியாத அவமானத்தால் தமிழ்நாட்டில் தினந்தோறும் 2 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதை செலவாக பார்க்காதீர்கள். மழை, வெயில் பாராமல் உழைக்கும் விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 100 அடி பள்ளத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு அரசு 50 அடி கயிறுதான் கொடுத்திருக்கிறது. இந்த 50 அடி கயிறை வைத்து எப்படி வெளியே வர முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததே ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் இத்தகைய குற்றங்கள் தொடரக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது என்றும், இனி பொறுத்தது போதும், பொங்கி எழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். துபாய் போல பெண்கள் மீது கைவைத்தோருக்கு மரண பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மீது கைவைப்போருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.