உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், காதலியை சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், அப்பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை கயிற்றால் தலைகீழாகத் தொங்கவிட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக சித்ரவதை செய்ததோடு, அவரை விடுவிக்க அவரது குடும்பத்தினரிடம் இருந்து கிராம சபை ₹5 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படும் தகவல் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
சஹாரன்பூர் மாவட்டம், மிர்சாபூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது காதலியைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இளைஞரைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை கயிற்றால் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரைத் தொடர்ந்து தாக்கிய பின்னர், வீட்டின் அருகில் இருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
மறுநாள் காலையில் இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இளைஞரின் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் அவசரமாகக் கிராம சபை (பஞ்சாயத்து) கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், வாலிபரை விடுவிப்பதற்கு ஈடாக அவரது குடும்பத்தினர் ₹5 லட்சம் அபராதமாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி இளைஞரின் குடும்பத்தினரும் ₹5 லட்சத்தைக் கொடுத்து அவரை மீட்டுச் சென்றுள்ளனர்.
இதனிடையே, இளைஞரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு அடிக்கும் கொடூரக் காணொளி இணையதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், வாலிபர் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில், வலியால் அலறித் தன் முகத்தை மறைக்க முயல்வதும், சுற்றி நிற்கும் நபர்கள் வேடிக்கை பார்ப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த கொடூரக் காட்சி காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த வீடியோவைக் கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ள மிர்சாபூர் காவல்துறையினர், இளைஞரைத் சித்ரவதை செய்த நபர்களை தீவிரமாக அடையாளம் கண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரத்தில் தலையிட்டு இளைஞரை சித்ரவதை செய்ததும், அதற்கு கிராம சபையின் பெயரால் அபராதம் விதித்ததும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

