தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் கொண்டாட மாவட்ட நிர்வாகம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக விளங்கி வருவதால், இந்த விழாவையும் அதே பாரம்பரியத்துடன் கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய கடமை உள்ளது என்பதை வலியுறுத்தி, நீர்நிலைகளான கடல், ஆறு, குளம் போன்றவற்றை பாதுகாப்பதன் அவசியத்தை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான முக்கிய வேண்டுகோள்கள் பின்வருமாறு:
1. களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக், தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அனுமதிக்கப்படும்.
2. சிலைகளின் அலங்காரத்திற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம்.
3. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை பயன்படுத்தக்கூடாது. மாறாக, சுற்றுச்சூழலுக்குகந்த, நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
6. விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய, மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உண்டு. விநாயகர் சதுர்த்தி என்பது தெய்வீகக் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும். மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளைக் கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

