தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டசபையில் முதல்வரின் எலும்பு உடைக்கப்படும் என்றும் அவர் அப்போது கருத்து தெரிவித்தார்.
இந்த பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர். முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, மார்க்கண்டேயனின் வழக்கறிஞர் காசிராஜன், அவரை விடுவிக்கக் கோரி தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்தார். அதே சமயம், குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் தரப்பில், மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீதேவி, 'கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரா என்பது குறித்து விசாரிக்க இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.
இருப்பினும், காவல்துறையினரின் காவல் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். மேலும், மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், மார்க்கண்டேயன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விசாரணையின் முடிவில் மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது வழக்கு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

