விஜய் அதிகாரத்துக்காக சமரசம் செய்கிறாரா? – பா.ரஞ்சித் கேள்வி

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்.

மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' மற்றும் 'நீலம் மாணவர் இயக்கம்' சார்பில் 'கல்வி நீதிக்காக ஒன்றிணைவோம்' என்ற முழக்கத்துடன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்தில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடகர் அறிவு, நடிகை ரேவதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ஆட்சியைப் பிடித்தவுடன் த.வெ.க தலைவர் விஜய்யும் முந்தைய அரசுகளைப் போல அதிகாரத்திற்காகச் சமரசம் செய்துகொள்கிறாரா என்று கடுமையாக விமர்சித்தார். சாதியினருக்குப் பயந்தே அம்பேத்கரின் சிலையைத் திறக்கத் தயங்குவதாகவும் அவர் சாடினார். மாணவர்களின் அறவழிப் போராட்டத்திற்குப் பாதுகாப்பான இடத்தை ஒதுக்கித் தந்து, நீட் தேர்வை ஒழிப்பதில் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

'இன்று பாசிச பாஜக பயப்படுகிற ஒரே ஆள் அம்பேத்கர் மட்டும்தான். வேறு யாருக்கும் கிடையாது. பாஜக பல கட்டுக்கதைகளை உருவாக்குகிறது,' என்று பா.ரஞ்சித் குறிப்பிட்டார்.

'இளைஞர்கள் இங்கே இருக்கிற எஸ்.எஃப்.ஐ, முற்போக்கு இயக்கத்தில் இருக்கிற தோழர்கள் நிறைய பேர் அடி வாங்குவதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த வீடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? அவர் ஏன் இந்த வீடியோக்களைப் பார்க்கவில்லை. ஏன் காவலர்களை வைத்து அவர்களை ஒடுக்க வேண்டும்? நீங்கள் நீட் எதிர்ப்பாளர் தானே, நீட்டை நீங்கள் எதிர்க்கிறீர்கள், நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையில் உள்ள உங்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. அப்போது நீங்களே ஒரு இடத்தைக் கொடுங்கள். எங்களுக்கு ஒரு பெரிய இடம் கொடுங்கள், மாணவர்கள் அறவழியில் போராடட்டும். மாணவர்கள் குரலுக்கு செவி கொடுங்கள். இந்த நிகழ்வின் மிக முக்கியமான கோரிக்கையாக, மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுங்கள். அப்படி கொடுக்கிறபோது, உங்களோடு சேர்த்து நாங்களும் போராடுகிறோம். உங்களோடு சேர்ந்து நாங்கள் கனவு கண்ட அந்த நீட்டை முற்றிலுமாக ஒழிக்கலாம் வாருங்கள் முதல்வர் அவர்களே,' என அவர் உரையாற்றினார்.

'கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சி.ஜே.பி அமைப்பினர் 4 நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். நேற்று நிறைய கூட்டம் இருந்தது. நிறைய இளைஞர்கள், புதுப்புது முகங்கள் இருந்தார்கள். பாட்டுப் பாடுகிறார்கள், அந்தப் போராட்டத்தை அற்புதமாக வளர்க்கிறார்கள். மக்களுக்கு நிறைய செய்திகளைச் சொல்கிறார்கள். அவர்களுடைய அறவழி போராட்டத்தின் மூலமாக அங்கே நிறைய இளைஞர்கள் சேர்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அது ஏன் ஒரு கட்டுப்பாடான இடத்தில் வைக்க வேண்டும். ஏன் அவர்களுக்கு மெரினாவைப் பூட்ட வேண்டும். எனக்கு புரியவே இல்லை. எனவே, மக்களோடு சேர்ந்து நிற்கிற முதல்வராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். மாணவர்களோடு சேர்ந்து நிற்கிற முதல்வராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். நீங்கள் விரும்பிய நீட் ஒழிப்பை எங்களோடு சேர்ந்து களம் கண்டு போராட அனுமதித்து, நீங்கள் இதை முன்னெடுத்து நீட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் வைக்கிறோம்,' என்றும் அவர் கூறினார்.

'எப்போதுமே ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்த உடனே என்ன செய்கிறார்கள் என்பதுதான் இங்கேயும் இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். ஏற்கெனவே இருந்த அரசும் ‘பவர்’ வந்த பிறகு, அந்த பவரை இயக்காமல், என்ன சமரசம் செய்ய முடியுமோ அதை பண்ணார்கள். அதேதான் இங்கேயும் நடந்துகொண்டிருக்கிறது. அதனால், இங்கே ஆட்சி ஆரம்பித்த உடனே பாபாசாகேப் அம்பேத்கர் சிலையைத் திறக்க முடியவில்லை என்றால் என்ன காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம். வேறு ஒன்றும் கிடையாது. சாதியாளர்களுக்கு பயப்படுகிறார்கள். நீங்கள் போய் திறந்து வைத்துவிட்டால் எதிர் தரப்பு சாதி இவர்களை பழிக்கும். எதிர் சாதி ஒரு பிரச்னை செய்வார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு விழாது. அதனால், நாம் அதிகாரத்தை இழந்துவிடுவோம். அதனால், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த சமரசம் தேவை. சாதி ரீதியான, மத ரீதியான, வர்க்க ரீதியான, பொருளாதார ரீதியான சமரசத்தோடுதான் நாங்கள் இயங்குகிறோம் என்று சொல்ல வருகிறீர்களா? என்பதுதான் என்னுடைய ஒரு கேள்வி,' என பா.ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.

'வன்னி அரசு தோழரைத் தவிர மீதி 7 தலித் அமைச்சர்கள் என்றைக்காவது தலித் பிரச்சனைகளை குறித்து பேசியிருக்கிறார்களா? இந்த கேள்வியுடன் நீங்கள் மாணவர்களின் போராட்டத்துக்கு செவி சாய்க்க வேண்டும், நிரந்தரமாக நீட் பிரச்னையை இந்திய அளவில் மாணவர்கள் சேர்ந்து ரொம்ப வீரியமாகப் போராட, அறவழியில் போராட, பாதுகாப்பான, ஒரு போராட்ட வழிமுறையுடன் கூடிய ஒரு இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், உங்களுடைய நீட் எதிர்ப்பு என்பது வெறும் சொல்லாக, வெறும் பேச்சாக, எழுத்தாக இல்லாமல் எங்களோடு சேர்ந்து, நீங்களுடம் கூட இருந்து போராடி, இதை நாம் வென்றெடுக்க வேண்டும். அதில்தான் நம்முடைய இளைஞர்களின் எதிர்காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை பாபாசாகேப் அம்பேத்கருடைய ஜெய்பீம் என்ற முழக்கத்தோடு ஆரம்பித்து இன்றைக்கு இந்தியா முழுக்க ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிற சி.ஜே.பி அமைப்போடு நாம் கூட நிற்பதில் எங்களுக்கு பெருமை. நீங்களும் எங்களோடு கூட நில்லுங்கள். இங்கே வந்திருக்கிற எல்லா தோழர்களுக்கும் நன்றி. நான் பெரிதும் மதிக்கிற, இயக்குநர்கள், சக தோழர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஆதரவு, குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் திரண்டது, இந்த அமைப்புக்கு ஒரு பெரிய கூடுதல் நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் காவலர்களுடைய ஒத்துழைப்பும் மிக மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன். உங்கள் எல்லோருக்கும் ஜெய்பீம் கலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,' என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version