விஜய் ஒரு புரட்சியாளர் – ஆளுநர் புகழாரம்

புதிய கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை அமைத்திருக்கும் விஜய்யை ஆளுநர் ஆர்.என்.ரவி வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், 'புரட்சியை ஏற்படுத்தியவர் விஜய்' என்று குறிப்பிட்டார்.

முந்தைய அரசு போதை கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட ஆளுநர், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் ஒழிப்பில் அரசு தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அமைதியான, பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும், போதையில்லா தமிழகம் என்ற அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணி காக்கும் வகையில், ஒரு விரிவான நிலையான சுற்றுலா கொள்கை வகுக்கப்படும் என்றும், உட்கட்டமைப்பை மேம்படுத்தி, பாதுகாப்போடு தமிழ்நாட்டை உலகளாவிய பாரம்பரிய மற்றும் சூழல்சார் சுற்றுலாத் தலமாக இந்த அரசு மாற்றும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், புதிய கல்விக் கொள்கையை தவெக அரசு உறுதியாக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக, தடைகள் மற்றும் பண பலத்தைத் தாண்டி ஜனநாயகத்தில் விஜய் வென்றுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version