தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், "முதலில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என முதலமைச்சர் விஜய் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு காரணம் அமித்ஷாவை பார்த்து பயமா?" என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தென்னிந்திய முதலமைச்சர்கள் கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மேகதாது அணை கட்டும் திட்டத்தை வெளிப்படையாக பேசியபோது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காத்தார் என்றும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையும் அவர் கடுமையாக சாடினார். "படித்த மேதாவிகளை வைத்திருப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. நமது உரிமைகளை பறிக்கிறார்கள். கர்நாடகாவில் ஒரு நிலைப்பாடு, தெலங்கானாவில் ஒரு நிலைப்பாடு என மாநிலத்திற்கு மாநிலம் நிலைப்பாடு மாறுகிறது. ஆனால், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் வாய்திறப்பதில்லை. ஏன் இந்த அமைதி?" என அவர் வினவினார்.
தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காக உறுதியாக போராடும் ஒரே இயக்கம் தி.மு.க தான் என்றும், வேறு இடத்திலிருந்து வரும் கட்சிகள் எல்லாம் விளம்பரம் தேடுவதற்காகவே செயல்படுவதாகவும் தயாநிதி மாறன் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முதலமைச்சர் விஜய், தனது உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் திடீர் நிலைப்பாடு மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அழுத்தத்திற்கே முதலமைச்சர் விஜய் பணிந்துவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தி.மு.க.வின் இந்த விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

