முதல்வர் விஜய் பதவியேற்று 13 நாட்களில் 30+ குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் பதவியேற்று வெறும் 13 நாட்களே ஆன நிலையில், மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'தூய சக்தியா அல்லது தூங்கும் சக்தியா?' என்ற கேள்வியை எழுப்பிய விஜய், திமுக எனும் தீய சக்திக்கு மாற்றாக தாங்கள் தூய சக்தி என்று கூறியிருந்தார். ஆனால், அவர் முதல்வராக பொறுப்பேற்ற 13 நாட்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், ரவுடிசம், வன்முறை என சுமார் 30-க்கும் அதிகமான குற்றங்கள் தினசரி செய்தித்தாள்களில் வெளிச்சம் போட்டு காட்டப்படுவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில் மக்கள் உயிர் பயத்துடன் நாட்களை கழித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் ஊசலாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். திருடன் கையில் சாவியை கொடுத்தது போல, குற்றவாளிகளை அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும் என்றும், அரசைக் கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயம் இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சரிசெய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, விதவிதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வர் கவனம் செலுத்துவது அவரது அனுபவமற்ற ஆளுமையை காட்டுவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் அவகாசம் கோரலாம், ஆனால் சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் எப்போது உணர்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version