பணபலம், அதிகார பலம் குழந்தைகளின் கதறலை மழுங்கடிக்குமா? வேல்முருகன் கேள்வி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

பணத்திமிரும் அதிகார பலமும் பச்சிளம் குழந்தைகளின் கதறலை மழுங்கடித்துவிடுமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய டிஜிட்டல் சான்றுகள் குறித்து காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், எவ்வித அதிகாரத் தலையீடோ அல்லது வெளித் தாக்கமோ இன்றி, அறிவியல் மற்றும் சட்டரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே புலனாய்வு அமைவது தலையாய கடமையாகும் என்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இதில் சமூகச் செல்வாக்கு, பணபலம், பதவி ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமின்றி, இதற்குத் துணைபோனவர்கள், மறைமுகமாகத் தொடர்புடையவர்கள் என அனைவரின் பங்கும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு, தகுந்த பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று வேல்முருகன் கோரியுள்ளார். மேலும், இவ்விகவாரம் தொடர்பாக முன்னதாகப் பெறப்பட்ட புகார்களை உரிய முறையில் விசாரிக்கத் தவறியவர்கள், புலனாய்வில் சுணக்கம் காட்டியவர்கள், ஆதாரங்களைப் புறக்கணித்தவர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் முடக்கியவர்கள் யார் என்பதும் தனியாகப் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது சட்டப்பூர்வக் கடமையை வேண்டுமென்றே புறக்கணித்ததோ அல்லது ஆதாரங்களைச் சிதைக்க முயன்றதோ தெரியவந்தால், அவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் துறை ரீதியாகவும் குற்றவியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், கைப்பற்றப்பட்ட காணொளிகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் முறையான தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சான்றுகளின் நம்பகத்தன்மை சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு அரசியல் நோக்கங்களுக்கான தளமாக மாறக் கூடாது என்றும், அதே தருணத்தில் அதிகார பலத்தால் உண்மை குழிதோண்டிப் புதைக்கப்படவும் கூடாது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். உண்மையை அறிவியல் சான்றுகள் நிலைநாட்டட்டும், குற்றவாளிகளை நேர்மையான புலனாய்வு அடையாளப்படுத்தட்டும், நீதிமன்றம் உரிய தண்டனையை விரைந்து வழங்கட்டும், கடமை தவறியோருக்கும் சட்டம் தன் பதிலை அளிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உரிய கண்காணிப்புடன் மறுஆய்வு செய்து, டிஜிட்டல் சான்றுகளின் உண்மைத்தன்மையை விரைந்து உறுதிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முந்தைய கட்டங்களில் இவ்வழக்கை நேர்மையாகக் கையாளத் தவறியவர்கள் மீதும் தயவுதாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு முழுமையான நீதியைத் தமிழ்நாடு அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version