ஜெம் கிரானைட் வீரமணி தொடர்பான வழக்கு தமிழக முதலமைச்சரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் பின்புலம் இருந்ததால்தான் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இத்தனை நாட்களாகப் பேசாமல் இருந்ததாகவும், தற்போது வெளியே வந்து புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். அதிகார பலத்தால் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் இனி நடக்காது என்றும், இது குறித்து அனைவரும் பேசும்போது, அன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இது குறித்துப் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
'உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்துள்ளார்கள். அதைக் கண்டித்தாவது வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்' என்று அவர் குறிப்பிட்டார். ஜெம் வீரமணி வழக்கு முதலமைச்சரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வீடியோ தெளிவு இல்லை என்று கேட்பவர்கள், HD வீடியோ வேண்டுமா என்றும், மருந்தளவு மனசாட்சி வேண்டாமா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சென்ற ஆட்சியில் இந்த வழக்கு சரியாகக் கையாளப்பட்டிருந்தால், இது ஒரு நல்ல விழிப்புணர்வாக மாறியிருக்கும் என்றும், யாருக்காக இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டது என்றும் அவர் வினவினார்.
இந்த வழக்கு இந்தியாவையே உலுக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது என்றும், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் போன்று பலரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு பலரின் வாய்கள் மூடப்பட்டதாகவும், போக்சோ வழக்கில் FIR பதிவு செய்ததையே பெரிய விஷயமாகப் பேசிக்கொண்டிருப்பதாகவும், அதற்காக தேசிய விருது கொடுக்க முடியுமா என்றும் அவர் விமர்சித்தார்.
ஏன் இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டது என்பதை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார். இந்த வழக்கு தற்போது முதல்வரின் நேரடிப் பார்வையில் இருப்பதால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

